Sunday, February 13, 2011

"பயணம்" ஒரு அனுபவம்


வணக்கம் நண்பர்களே! நேற்று "பயணம்" திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். அதை பற்றி ஒரு பதிவு எழுதியே ஆக வேண்டும் என்ற அளவுக்கு பாதித்தது. இப்பதிவு அப்படத்தின் விமர்சனம் அல்ல. படம் பார்த்த என் அனுபவம்.

எங்கிருந்து ஆரம்பிப்பது? சரி. நான் பிரகாஷ்ராஜின் ரசிகன். அவர் நடிப்புக்கும் அதற்கும் மேலாக அவரின் தயாரிப்புக்கும்.அவர் படங்களான "மொழி", "அபியும் நானும்" போன்ற படங்கள் என்னை மிகவும் ஈர்த்தன."அழகிய தீயே" பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.அதுவும் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் கூறினர்.உங்களுக்கு படங்கள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இவைகள் அனைத்தும் நல்ல படங்கள் என்று ஒத்துகொள்வதில் எவ்வித மாற்று கருத்தும் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன்.

இப்படி இருக்கையில் பொங்கலின் போது பிரகாஷ்ராஜ் மற்றும் ராதா மோகனின் பேட்டி பார்த்து "பயணம்" என்ற படம் வரப்போவதை அறிந்தேன். எப்போது வரும் என்று அவர்கள் சொல்லவில்லை. காத்துக்கொண்டிருந்தேன். வெள்ளிகிழமை வெளியானதும் அன்று வேலை இருந்ததால் சனிக்கிழமை காலையிலேயே சென்று விட்டேன் சத்யம் தியேட்டருக்கு.

போனவுடன் ஒரு பயம். அதிக எதிர்பார்ப்பு என்பது சரியில்லை.ஏனெனில் சமீபத்தில் சில படங்களுக்கு அதிக எதிர்பார்ப்புடன் சென்று அவைகள் நன்றாக இருந்தும் அவைகளை ரசிக்க முடியவில்லை. காரணம் அதிக எதிர்பார்ப்பு. ஆனால் இந்த படம் அவ்வாறு என்னை ஏமாற்றவில்லை. அதிக எதிர்பார்ப்புடன் சென்றும் இந்த படம் எதிர்பார்ப்புக்கும் மேலாக இருந்தது.

ராதா மோகன் பேட்டியில் கூறியது போல இந்த படம் ஒரு அனுபவமாகவே இருந்தது.படம் ஒரு த்ரில்லர் ஆக இருந்தாலும் காட்சிகள் முழுக்க ஒரு மெல்லிய, இல்லை இல்லை ஓர் அற்புதமான நகைச்சுவை கூடவே இருந்தது. படத்தில் நாகார்ஜுனா கதாநாயகன் என்று தெரிந்தாலும்,உண்மையான கதாநாயகன் கதையும் திரைக்கதையும் தான். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது பாதி முழுக்க சீட்டின் நுனியிலேயே உக்கார வைக்கிறார்கள். ஆனால் அப்பவும் சிரிக்க வைப்பதுதான் உச்சகட்டம்.படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. எங்கேயும் எனக்கு தெரிந்து தவறு செய்யவில்லை.

சமீப காலமாக படங்களுக்கு சில வலைதளங்களில் அவர்கள் போடும் நட்சத்திரங்களை வைத்து சென்று கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு என தெரிந்து கொண்டேன். இவ்வளவு அருமையான படத்திற்கு குறைந்த நட்சத்திரங்களே கொடுத்திருந்தார்கள்.ரசிகர்களாகிய நாம் பார்த்து நாம்தான் நட்சத்திரங்களை கொடுக்க வேண்டும்.

சினிமாவின் ரசிகர்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய படம். படம் பிடிக்கவில்லை என்று ஒருவராலும் கூற முடியாது என உறுதியாக கூறுவேன்.

பொறுமையாக எனது பதிவை படித்த உங்களுக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.

4 comments:

  1. எல்லாம் சரி, பயணம் உண்மையிலேயே ஒரு வித்தியாசமான, விறுவிறுப்பான படம்தான். ஆனால், இந்தப் படத்தின் கதை, -80 களில் வெளிவந்த ஒரு பிரபல ஆங்கில நாவலான, "Rat Trap," என்பதின் அப்பட்டமான காப்பி. Craig Thomas என்ற ஆங்கில நாவலாசியர் எழுதிய முதல் நாவல் இது, அப்போது மிகப் புகழ்பெற்ற ஒரு புத்தகமாகும். இந்த நாவலாசியர் இன்னும் கதைகள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.

    ReplyDelete
  2. http://www.athishaonline.com/2011/02/blog-post_12.html

    ReplyDelete
  3. உங்கள் அனுபவம்
    படம் பார்க்கத் தூண்டுகிறது.
    நன்றி பாலா.

    ReplyDelete
  4. நன்றாகவே எழுதுகிறீர்கள் பாலா. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    பயணம் படத்தின் பல காட்சிகள் ரசிக்கும்படியாகவே இருந்தது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

    கிங் விஸ்வா
    தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

    ReplyDelete