Sunday, February 13, 2011

"பயணம்" ஒரு அனுபவம்


வணக்கம் நண்பர்களே! நேற்று "பயணம்" திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். அதை பற்றி ஒரு பதிவு எழுதியே ஆக வேண்டும் என்ற அளவுக்கு பாதித்தது. இப்பதிவு அப்படத்தின் விமர்சனம் அல்ல. படம் பார்த்த என் அனுபவம்.

எங்கிருந்து ஆரம்பிப்பது? சரி. நான் பிரகாஷ்ராஜின் ரசிகன். அவர் நடிப்புக்கும் அதற்கும் மேலாக அவரின் தயாரிப்புக்கும்.அவர் படங்களான "மொழி", "அபியும் நானும்" போன்ற படங்கள் என்னை மிகவும் ஈர்த்தன."அழகிய தீயே" பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.அதுவும் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் கூறினர்.உங்களுக்கு படங்கள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இவைகள் அனைத்தும் நல்ல படங்கள் என்று ஒத்துகொள்வதில் எவ்வித மாற்று கருத்தும் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன்.

இப்படி இருக்கையில் பொங்கலின் போது பிரகாஷ்ராஜ் மற்றும் ராதா மோகனின் பேட்டி பார்த்து "பயணம்" என்ற படம் வரப்போவதை அறிந்தேன். எப்போது வரும் என்று அவர்கள் சொல்லவில்லை. காத்துக்கொண்டிருந்தேன். வெள்ளிகிழமை வெளியானதும் அன்று வேலை இருந்ததால் சனிக்கிழமை காலையிலேயே சென்று விட்டேன் சத்யம் தியேட்டருக்கு.

போனவுடன் ஒரு பயம். அதிக எதிர்பார்ப்பு என்பது சரியில்லை.ஏனெனில் சமீபத்தில் சில படங்களுக்கு அதிக எதிர்பார்ப்புடன் சென்று அவைகள் நன்றாக இருந்தும் அவைகளை ரசிக்க முடியவில்லை. காரணம் அதிக எதிர்பார்ப்பு. ஆனால் இந்த படம் அவ்வாறு என்னை ஏமாற்றவில்லை. அதிக எதிர்பார்ப்புடன் சென்றும் இந்த படம் எதிர்பார்ப்புக்கும் மேலாக இருந்தது.

ராதா மோகன் பேட்டியில் கூறியது போல இந்த படம் ஒரு அனுபவமாகவே இருந்தது.படம் ஒரு த்ரில்லர் ஆக இருந்தாலும் காட்சிகள் முழுக்க ஒரு மெல்லிய, இல்லை இல்லை ஓர் அற்புதமான நகைச்சுவை கூடவே இருந்தது. படத்தில் நாகார்ஜுனா கதாநாயகன் என்று தெரிந்தாலும்,உண்மையான கதாநாயகன் கதையும் திரைக்கதையும் தான். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது பாதி முழுக்க சீட்டின் நுனியிலேயே உக்கார வைக்கிறார்கள். ஆனால் அப்பவும் சிரிக்க வைப்பதுதான் உச்சகட்டம்.படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. எங்கேயும் எனக்கு தெரிந்து தவறு செய்யவில்லை.

சமீப காலமாக படங்களுக்கு சில வலைதளங்களில் அவர்கள் போடும் நட்சத்திரங்களை வைத்து சென்று கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு என தெரிந்து கொண்டேன். இவ்வளவு அருமையான படத்திற்கு குறைந்த நட்சத்திரங்களே கொடுத்திருந்தார்கள்.ரசிகர்களாகிய நாம் பார்த்து நாம்தான் நட்சத்திரங்களை கொடுக்க வேண்டும்.

சினிமாவின் ரசிகர்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய படம். படம் பிடிக்கவில்லை என்று ஒருவராலும் கூற முடியாது என உறுதியாக கூறுவேன்.

பொறுமையாக எனது பதிவை படித்த உங்களுக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.

Saturday, February 5, 2011

SMS மொக்கைகள்


தேர்வு கண்காணிப்பாளர்: ஏன்டா எக்ஸாம் எழுதும்போது காதுல வாட்ச வச்சுட்டு இருக்க ?

மாணவர்: "காலம் பதில் சொல்லும் " அதனால்தான் சார்
--------------------------------------------------------------------------------------------

LKG பையன் போனில்:ஹலோ, இன்னைக்கு என் குட்டி பையன் ஸ்கூலுக்கு வர மாட்டான். ஏன்னா அவனுக்கு உடம்பு சரியில்லை.

ஆசிரியர்: சரி. நீங்க யார் பேசறீங்க?

பையன்: நானா..... நா... நா... எங்க அப்பா பேசறேன்.

ஒன்னுமே தெரியாத student கிட்ட Question paper தராங்க.எல்லாம் தெரிஞ்ச Teacher கிட்ட Answer paper தராங்க. என்ன கொடும சார் இது....
-------------------------------------------------------------------------------------------

இளைஞர்களுக்கு 9 அறிவுரைகள்:
1.எந்த பெண்களையும் காதலிக்காதீர்கள்
2.பெற்றோரிடம் பொய் கூறாதீர்கள்
3.யாரிடமும் கோபப்படாதீர்கள்.
4.எதிரிகளிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்
5.நண்பர்களிடம் நன்றி கூறுங்கள்.
6.பள்ளி/ கல்லூரிக்கு மட்டம் போடாதீர்கள்.
7.நள்ளிரவு வரை ஊர் சுத்தாதீர்கள்
8.எப்போதும் நன்றாக படியுங்கள்.
9.மேல் சொன்ன எட்டு அறிவுரைகளையும் பின் பற்றினால் உடனே செத்து விடுங்கள்.

முதல் எட்டு அறிவுரையை நீ செய்ய மாடேய்ன்னு தெரியும் . ஏன்னா நீ என் "நண்பேண்டா"

---------------------------------------------------------------------------------------------

ஒருவனிடம் 200 ரூபாய் உள்ளது. அவன் 4 பிச்சைகாரர்களுக்கு தலா 100 ரூபாய் தருகிறான்.
இந்த கணக்கு சரியா? தப்பா?



தப்பில்ல




நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.
----------------------------------------------------------------------------------------------

ஒரு குழந்தையின் காதல் கவிதை:
அவள் பாதம் பட்ட இடத்திற்கெல்லாம் முத்தமிட்டேன். ஆனால் அவள் சென்று முறையிட்டால் என் மம்மியிடம்

" ஆண்ட்டி உங்க பையன் மண்ணு திங்கறான்."

----------------------------------------------------------------------------------------------------

கல்யாணத்துக்கு முந்தைய காதல்:
" அன்பே நீ இன்றி நான் இல்லை... நான் இன்றி நீ இல்லை"

கல்யாணத்துக்கு பின்பு:
" மவளே! ஒன்னு நீ இருக்கணும் இல்ல நான் இருக்கணும்."

Thursday, February 3, 2011

மீண்டும் ஓர் அறிமுகம்


வணக்கம் நண்பர்களே! மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.மீண்டும் இந்த பதிவுலகத்திற்கு வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. நவம்பர் 14, 2010 இல் தான் பதிவுலகில் நுழைந்தேன். எழுதும் ஆர்வம் மட்டுமே உண்டு. ஆனால் எவ்வாறு எழுதுவது, நாம் எழுதியதை எல்லோரும் படிப்பார்களா எழுத்து நடை சரியாக வருமா போன்ற சந்தேகங்கள் என்னை தடுத்து வந்தன. சரி. முயற்சி செஞ்சுதான் பார்ப்பமே என்று எழுத ஆரம்பித்தேன்.ஒவ்வொரு பதிவின் போதும் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வந்தேன், வருகிறேன்.

இந்த நிலையில்தான் திடீரென எனது வலைப்பூவை யாரோ misuse செய்கிறார்கள் என்று கூறி அழித்து விட்டார்கள். நான் மனமுடைந்து விட்டேன். பிறகு யாருடைய வலைபதிவையும் பார்க்கவில்லை. ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று தான் பலரது வலைபூக்களை பார்த்தேன். எடிசன் கதை ஞாபகத்திற்கு வந்தது. சரி நம்முடைய எல்லா தவறுகளும் மறைந்து விட்டன. புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்கலாம் என்று blogger ஐ திறக்கும் போதுதான் மீண்டும் இந்த வலைப்பூ இருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். இதோ எழுத ஆரம்பித்து விட்டேன்.

நண்பர்களே! நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ இது போன்ற வலைப்பூ மறையும் அனுபவம் கொண்டதுண்டா? அதற்க்கான காரணம் தெரிந்தால் சொல்லுங்கள். வரும் காலங்களில் இது நிகழா வண்ணம் காத்து கொள்ள உதவியாய் இருக்கும்.

அப்புறம் இந்த வலைப்பூ எழுதாத காலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்மீண்டும் வந்து விட்டது. 2007 வருடம் எழுதியிருக்கிறேன். அதன் பிறகு இந்த 2011 வருடம் தான் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். நாம் வாழும் வாழ்க்கை இல்எந்த அடையாளம் பதிக்க முடியா விட்டாலும் நமது எழுத்துக்களையாவது விட்டுசெல்கிறோம் என்ற மகிழ்ச்சி கொஞ்சம் உள்ளது. குறைந்தது இந்த ஒரு வருடம்முழுமையாகவாவது நாட்குறிப்பு எழுத வேண்டும் .